Thursday, May 3, 2007

தனிமைப் பயணங்கள்

தெருவிறங்கி நடக்கையில்
இரண்டடிக்குள் என்னுடன் நீ

சற்றே தோல் உரசி
என் விரல்களுள் உன் விரல்கள்

என் காதோர
உன் இரகசியங்களுக்காக
கேட்கும் வரம் வேண்டி
என் கன்னங்கள்

கர்வமிழந்து நிற்கிறது
தனிமைப் பயணங்களில்
தான் மட்டுமே
துணையென்றிருந்த
என் நிழல்

பார்க்கும் போதெல்லாம்
ஒரு புன்னகையை
மட்டுமே விட்டுச் செல்கிறாய்
நீ அறிந்து

Monday, April 23, 2007

வண்ணத்துப் பூச்சி

ஒவ்வொரு
வண்ணத்துப் பூச்சியாய்
இரசித்துக் கொண்டிருக்கிறாய்
நீ

அவற்றின் அத்தனை
வண்ணங்களும்
இரசித்துக் கொண்டிருக்கின்றன
உன்னை

Thursday, April 5, 2007

ஆற்றுத் தண்ணீர்


உன்னை யார்
ஆற்றில் குளிக்கச்
சொன்னது

ஓடும்
தண்ணீரெல்லாம்
நின்று
உன்னையே
பார்த்துக் கொண்டிருக்கிறது பார்

Tuesday, March 20, 2007

உன் அணிகலன்கள்

விரைவில்
தண்டிக்க வேண்டும்
உன்
அணிகலன்களையெல்லாம்

எனக்கு முன்
உன்னைத்
தழுவிக்கொண்டதற்காக

Friday, March 16, 2007

ஒற்றை தேவதை


சில்லென்ற
மழைச்சாரலுக்கு
துப்பட்டாவை முக்காடாக்கி

ஒற்றை
தேவதையாய்
நம் தெருவில்
நீ

மழைத்துளி
உன் முகத்தில்
முத்தமிட்டுப்போன
அக்கணம் முதல்

உன்னுடனே
நனைகிறேன் நான்
எல்லா மழை நாட்களிலும்

Wednesday, March 14, 2007

முதல் போட்டோ

பல தருணங்களில்
பல கோணங்களில்
பதிவு செய்திருக்கிறாய்
என்னை
இன்று வரை

அத்தனையும் மீறி
ஆட்கொண்டுவிறகிது மனம்
கோவிலில் திருட்டுத்தனமாக
நீ எடுத்த
அந்த
முதல் போட்டோவில்

-அவளிடமிருந்து திருடியது

Tuesday, March 13, 2007

முத்தமொழி


மொழிகள்

எத்தனை கற்று
என்ன பயன்

அத்தனையும்
மறந்து போகின்றன
உன்னுடனான சந்திப்புகளில்

நீயும்
விதிவிலக்கல்ல

தினம் தினம்
கற்றுக் கொடுத்தாலும்

மீண்டும் மீண்டும்
தவறாகவே உச்சரிக்கிறாய்
முத்தமொழி

-அவளிடமிருந்து திருடியது


மொழிகள்
எத்தனை கற்று
என்ன பயன்

அத்தனையும்
மறந்து போகின்றன
உன்னுடனான சந்திப்புகளில்

நினைவு வரும்
ஒற்றை மொழியையும்
வேண்டுமென்றே மறந்துபோகிறேன்

மீண்டும் மீண்டும்
உன்னிடம் கற்க
முத்தமொழி

Friday, March 9, 2007

என் கைகளுள் நீ

அத்தனை சுகமானது
பின்பனிக்கால பேருந்து
பயணம்

பனிக்காற்று முகத்திலறைய
சற்றே தலை சாய்த்த
சன்னலோரம்

தொலைவிலிருந்தும்
குளிருக்கு குறுக்கணைத்த
என் கைகளுள் நீ